கையெழுத்து – 1 பதினாறு வயதினிலே!
இரவி பரமேஸ்வரி.
மாறி,மாறி வெயிலும், மழையும் இலண்டனைச் சோடித்த இன்றைய நாள் (12.03.10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறது. பொதுவில் வெள்ளிக்கிழமை என்றால் உற்சாகக் கிணறு ததும்பி வழிகின்ற நாள். ஆனால் இன்றைய வெள்ளி வெப்பியாரத்தால் வேலி போட வைத்துவிட்டது. இந்த அரசியல் விஞ்ஞாபனச் சொற்களின் வசீகரமும், அந்தச் சொற்களைச் 'செய்த' சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரனின் முகங்களும் மாறிமாறி என்னை அசூயைப்படுத்துகின்றன.
சொல்லி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. 'நான் தமிழீழத்தை ஒரு போதும் ஏற்றதில்லை' என்று சம்பந்தன் சொன்ன சூடு இன்னும் ஆறவில்லை. அதேபோல நமது தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் இலங்கை அதிபர் தேர்தலின் போது கண்டித்த வார்த்தைகளையும் நாம் மறந்து விடவில்லை. ஆனால் சம்பந்தரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஈழத்தமிழ் மக்களின் உணர்வுப்பெருக்கை மையமாகக் கொண்டு எமது மறதிகளின் மேல் தமது தேர்தல் வெற்றிக்கான கட்டிடத்தை கட்டுகின்றனர்.
இந்த விஞ்ஞாபனத்தில் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற பதங்கள் உலர்ந்த சோற்றுப் பருக்கைகள் போல் சிதறிக்கிடக்கின்றன. இந்தச் சொற்களைக் கேட்டவுடன் ஆட்கள் இருப்பதையும் மறந்து வாய்விட்டுச் சிரித்தேன். எட, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் வந்த பிரச்சினை என்ன? இந்த மூன்று சொல்லாடல்களையும் முன்னெடுப்பது தொடர்பானது தானே? அப்பொழுது சம்பந்தன் சொன்னாரே 'தேர்தலின் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' – கஜேந்திரகுமார் சொன்னார் - 'இல்லை இப்பொழுதே மக்கள் முன் வைப்போம.'
இப்பொழுது ஏன் முன்வைக்கிறார்கள்? தேர்தல் கோமாளிகளுக்குத் தெரியும், தமிழ் மக்களின் உழைப்பு என்ன என்பது. தமது தேர்தல் வெற்றிக்கான மூன்று சொற்கள். இவை சும்மா சொல்லக்கூடாது - கருணாநிதியையே தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள். எனக்கு வேறொன்றும் உறைக்கிறது. அமிர்தலிங்கம், ஆனந்தசங்கரி போன்றவர்கள் சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரையும் விட ஆயிரம் மடங்கு திறம்.
சரி, நான் ஒரு கதை சொல்ல விழைகின்றேன். இவர்களின் விஞ்ஞாபனத்தில் இருந்து விளைந்த கதை இது. கதை அல்ல இது. வாசியுங்கள். இது முன்னுதாரணம் தான். முடிவுரையில் மீண்டும் கதைக்கின்றேன்.
1977ஆம் ஆண்டு எனக்கு பதினாறு வயது நிறைந்த பருவம். பதின்ம வயதில் (Teen age) எனக்கு இருக்க வேண்டியது காதல். வேறும் இளம் பருவக் கோளாறுகள். அவை இருந்தன ஒரு புறத்தே. என்னுள் கனன்று கொண்டிருந்தது அதுவல்ல. வேறொன்று.
நமது தளபதி அப்பாத்துரை அமிர்தலிங்கம் அப்போது தமிழீழப் போரை முன்னெடுக்கிறார். தமிழீழ ஆணை கேட்டு தனது கணீரென்ற குரலில் இடியென முழங்குகிறார். அவரின் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம். பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் அன்றைக்கு அவரது பேச்சு. ஓட்டைச் சைக்கிளில் ஓடிப் போனேன். பெரும் சனத்திரள். எள் போட்டால் எள் விழாது என்பார்கள். இல்லை, எண்ணையாகும். அப்பிடிச் சனம். தளபதி சொல்கிறார் 'அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை'.
சனக்கடல் பொங்கிச் சத்தம் காதைப் பிளந்தது. என் கைகள் தான் தட்டினவே ஒழிய கண்களால் பெருகின கண்ணீரைத் துடைக்க கைகள் எழவில்லை. என் கைதட்டலும் ஓயவில்லை. கண்ணீரும் ஓயவில்லை.
அப்ப அடுத்த பொங்கல் தமிழீழத்திலை. எங்கள் தளபதி அதைச் செய்வார். தளபதியோடு உடுப்பிட்டிச் சிங்கமும் (மு.சிவசிதம்பரம்) சேர்ந்து நிற்கிறார். அடங்காத் தமிழனும் (சி.சுந்தரலிங்கம்) இதற்கு ஆதரவு. மட்டக்களப்புச் சொல்லின் செல்வர் (செ.இராசதுரை) எத்தனை வீரியமாய் நிற்கிறார். காசி அண்ணரின் கவிதைப் பேச்சு. மங்கையக்காவின் வெண்கலக் குரல்.
அழுதேன் நான். அனல் பறக்க ஆவேசப்பட்டேன். நாமில்லா நாடுமில்லை. நமக்கென்றோர் நாடுமில்லை என்று ஏங்கினேன். இனி என்ன தமிழீழம் தானே? சிலிர்த்தேன் நான்.
சனத்திரளின் நெரிசலில் சைக்கிள் பார் தெறித்தது. பண்டத்தரிப்பிலை இருந்து அளவெட்டிக்கு ஐந்து மைல் காண சாமம் ஆகிற அந்தப் பொழுதுக்கு சைக்கிளை உருட்டி வந்தேன். அதுகூட நல்லது. இந்த நேரத்திற்கு அடையப் போகிற தமிழீழத்தை கற்பனை செய்தேன்.
மட்டக்களப்பு நெல்லுத்தான் இலங்கை முழுக்க சோறு போடுகிறது. யாழ்ப்பாணத்துக் கடல்தான் இலங்கை முழுவதும் சாப்பிட மீன் கொடுக்கிறது. யாழ்ப்பாணத்து வெங்காயமும், மிளகாயும் தான் கறிக்கு உவப்புச் சேர்க்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம் தமிழீழத் தலைநகர் திருமலைக்குரியது. என்னுள் தமிழீழம் கட்டுப்பட நான் வீட்டுப் படலைப் படியில் நின்றேன். 'ரொமி' ஊ..ஊ... என்று வாலாட்டி என் மேல் கால் வைத்து நக்கியது. 'பொறடா சைக்கிள் விழப் போகுது' தமிழீழம் காண்போம் எனத் தெட்டென எனக்குத் தெளிவாயிற்று.
அளவெட்டியில் இறைவனண்ணை (இறைகுமாரன்), உமாண்ணை (உமைகுமாரன்), ஆனந்தண்ணை, சற்குணமண்ணை என்று அண்ணாக்கள் பலரைப் போர் கோலத்தில நான் கண்டேன். இடுப்பில் கூரான கத்தியில்லை. சுழன்றெழுகின்ற வாளும் இல்லை. அம்பு, வில்லு, அம்பறாத்துணி அவையொன்றும் இல்லை. முறுக்கிய மீசை இல்லை. முன் கோபக் கண்களில்லை. மிடுக்கான நடை இல்லை. மீசை துடித்ததில்லை. திரண்டுரண்ட தோள்கள், கைகால்கள் அப்படியொன்றும் இல்லை. நிமிர்ந்த நடை, நேர் நின்ற பார்வை இவையொன்றும் இல்லை. நீண்ட குழல் கொண்டு குறிபார்த்துச் சுடும் துப்பாக்கி கூட இருந்ததில்லை. ஆயினும் அண்ணாக்கள் பலரை அப்போது நான் போர்க் கோலத்தில் கண்டேன்.
வாமதேவச் சித்தப்பா இரகசியமாகக் குசுகுசுத்தபடி அத்தானுக்குச் சொல்கிறார் -'நடுக்கடலிலை கப்பலிலை வைச்சு தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தப் போகினம். இப்பதான் நான் அறிஞ்சன். எலெக்சன் முடிஞ்ச உடனை அறிவிக்கப் போகினம்'. அப்ப பேந்தென்ன தமிழீழம் காண்போம் அது உறுதி.
ஓடி ஓடி ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கேட்டேன். அம்மாவும் என் சைக்கிளில் தொத்தினா. அப்பா தன் சைக்கிளில் ஏறிப் போனார். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலடியில் ஒரு கூட்டம். அளவெட்டி பெருமாள் கடலைப் பிள்ளையார் கோயில் வயல்வெளிக்குள் ஒரு கூட்டம். மல்லாகம் பழம் பிள்ளையார் கோயிலடியில் ஒரு மாநாடு. அம்மா ரோச் லைற்றைப் பிடித்தபடி சைக்கிளில் குந்தினா. அம்மா குண்டம்மா. அந்தப் பாரத்துடன் டைனமோவும் போட்டு சைக்கிள் ஓடமுடியாது. வியர்க்க, வியர்க்க தளபதியின் கர்ஜனை கேட்க ஓடினோம்.
எனக்கு நித்திரையே வருகுதில்லை. விடிந்தால் எலெக்சன். வெற்றிதான். என்றாலும் வீறாப்பான வெற்றியாக இருக்க வேணும்.
எழும்பி பல்லை விளக்கி உடன் தோய்ந்தேன். அம்மாள் கோயிலின் ஆறு மணிப் பூசைக்கு சைக்கிள் உழக்கினேன். 'அம்மாளே' என விழுந்து அட்டாங்க நமஸ்காரம் செய்தேன். 'தளபதிக்கு பெரு வெற்றி வேணும். எங்களுக்குத் தமிழீழம் கிடைக்க வேணும்' – அம்மாளை இறைஞ்சினேன். 'ஓம்' என்று அம்மாள் புன்னகைத்தா. 'என்னடா மோனை இது' என்ற மாதிரிச் சிரித்தா. 'சரி அம்மா போட்டு வாறன்' என்று விபூதி சந்தனம் அப்பி, காதுக்குப் பூ வைத்துப் போனேன்.
அந்தக் காலமை ஏழு மணிக்கே சீனக் கலட்டிப் பள்ளிக்கூடத்திலை கியூ நிண்டது. எனக்கு ஒரு வாக்கு கிடையாது. சிறீகாந்தண்ணை தந்த ஆருடையவோ கள்ள வாக்கை கையிலை வைத்துக் கொண்டு நின்றன். எல்லோரும் பெரிய வெற்றி பெற வேணும். ஆனால் எங்கன்ரை தளபதி எல்லாரிலும் மேலை உச்சத்திலை ஒரு பனை போல் நின்றாட வேணும். அல்லது நெற்றிப் பொட்டாகத் துலங்க வேணும்.
மை பூசின உடனேயே, உதயசூரியனுக்கு நேரே புள்ளடி போட முன்னமே மையைத் துடைச்சன். நகக் கீறுகளாக மை நின்றது. மற்ற நகத்தாலும் அதைச் சுரண்டினன். அப்பிடித்தான் வேணு அண்ணை சொல்லித் தந்தார். ஆசை ஆசையா, கவனம் கவனமா ஒரு கோட்டிலையும் முட்டுப்படாமல் உதயசூரியனுக்கு நேரை கார்பன் பென்சிலாலை புள்ளடி போட்டன்.
பராபரன் வீட்டிலை சிறிக்காந்தண்ணை நின்றார். 'ஆ...ரவியும் வந்திட்டான். இந்தா கொண்டு போய்ப் போடு' என்று ஒரு வாக்குச் சீட்டு தந்தார். எலெக்சன் பூத்திலை இருந்தவர் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார். வெக்கமாய் இருந்தது. கள்ளம் செய்யிறனோ என்ற படபடப்பும் இருந்தது. அது அப்ப மாத்திரம் தான்.
மூன்றாம் தரம், நான்காம் தரம், ஐந்தாம் தரம் போகிற போது அப்படி ஒன்றும் இருக்கவில்லை. தமிழீழத்துக்கான எனது பங்களிப்பு இது. என்ன களவு செய்கிறேன் நான்?
ஐந்தாம் தரத்துடன் நிறுத்தியது கை ஓய்ந்த காரணத்தினால் அல்ல. சின்னி விரல் கையை வேணு அண்ணை அழித்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு ஜீப் வந்ததில் வேணு அண்ணை சிதறியோடி விட்டார். எனது ஐந்து கள்ள வாக்குகளுடன் அவ்வளவும் நின்றன.
விடிந்த பிறகு தான் தெரிந்தது. தளபதிக்கு இருபத்தையாயிரம் வாக்குகள். எமது மற்றைய தளபதி சிவசிதம்பரத்துக்கு நல்லூர் தொகுதியில் இருபத்தையாயிரம் வாக்குகள்.
ஓடவேணும். தளபதியைப் பார்க்க வேணும். 'அய்யா' என்று கத்தி அவரை உயரத் தூக்க வேணும். உடனை ஓடிப்போய் தளபதியைப் பார்க்க வேணும். எங்கு நிற்பார்? தெல்லிப்பளையிலேயா? பண்ணாகத்திலேயா? யாழ்ப்பாணத்திலேயா? கொழும்பிலேயா?
எங்கு என்று தெரியாமலே போய்விட்டது. அவர் எங்கள் தளபதி என்பதும் இல்லாமல் போய்விட்டது. பேஜோ 304 காரில் உதயசூரியன் கொடி படபடக்க வந்த போது நான் சிலிர்த்தேன். இப்பொழுது தெல்லிப்பளைக்கும், பண்ணாகத்துக்கும் இடையிலான அளவெட்டியில் அவர்கள் வீட்டுக்கு முன் றோட்டில், மண்ணிற ஜீப்பில் பறக்கிறார் தளபதி. அதனாலும் அவரைக் காணமுடியவில்லை.
ஆண்டு ஒன்றாச்சு. அதுகூட எனக்குத் தெரியவில்லை. அத்தானின் விவாகரத்து வழக்குக்காக யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குப் போனேன். நீதிமன்ற மதிலில் எழுதியிருந்தது. 'ஆண்டு ஒன்றாச்சு - நாடு இரண்டாச்சா?' மேலும் ஒரு வாசகமும் எழுதப்பட்டிருந்தது. 'கேட்டது தமிழீழம் - கிடைத்தது ஜப்பான் ஜீப்'
பிறகு பிறகு எல்லா நம்பிக்கைகளும் எனக்கு அறவே ஒழிந்தது. விரல் கீறி தளபதிக்கு இரத்தப் பொட்டிட்ட கைகள் லியோ தியேட்டரில் 'வியட்நாம் வீடு' படம் பார்ப்பதற்காக சின்ன ஓட்டைக்குள்ளால் நுழைந்தன. 'வியட்நாம் வீடு' வில் சிவாஜி கணேசன் இறந்த போது எல்லாக் கவலைகளும் தீர அழுது முடித்தேன்.
பிறகு வந்தது 1981. பிறகு வந்தார் அமிர்தலிங்கம். 'துப்பாக்கிக் குண்டு விளையாட்டுப் பந்து – தூக்குமேடை பஞ்சு மெத்தை' என்று வீராவேச வசனங்கள் பேசிய வாய், மாவட்ட அபிவிருத்திச் சபையின் மகத்துவங்கள் பற்றிப் பேசத் தொடங்கின. தமிழீழ ஆணை கேட்ட தளபதி இப்போது தளர்பதியாகி மாவட்ட அபிவிருத்தி சபைக்கு மக்கள் ஆணை கேட்டார்.
அதன்பிறகு 1982 அல்லது 1983 என்று நம்புகின்றேன். நல்லூர் வீரகாளி அம்மன் கோயில் முன்றலில் உண்ணாவிரதம் இருக்க வந்தார். அம்மன் கோயில் வாளைத் தூக்கிச் சுழற்றி 'தமிழீழம் பெறுவோம்' என சபதம் எடுத்தார். அதை நம்ப அங்கு ஒருவரும் இருக்கவில்லை. வெறும் காற்றைச் சுழற்றிக் கிழித்த வாளுக்கு ஏது வீரம்? அவ்விடத்தில் அமிர்தலிங்கம் உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். அவ்வழியே வந்த இளைஞர்கள் சிலர் சோற்றுப் பார்சல் வாங்கி சோற்றை 'வலோத்காரமாக' தீத்திவிட்டுப் போயினர்.
பிறகு பிறகு நடந்தவை பெருங்கதை. அவை இங்கு எதற்கு? 1987இல் இந்திய ஆக்கிரமிப்புப்படை வந்தது. 1989இல் பொதுத் தேர்தல் நடந்தது. அமிர்தலிங்கம் கேட்டுப் பார்த்தார். ஈழத்துத் தமிழ் மக்கள் படுதோல்வியை அவருக்குப் பரிசாகக் கொடுத்தனர். பின் கதவால் (தேசியப் பட்டியல்) உள்நுழைந்தார். அப்பொழுதே அவரது அரசியல் வங்குரோத்துத்தனம் அப்பட்டமாக வெளித்தெரிந்தது.
இறுதியாக நான் அமிர்தலிங்கத்தைப் பார்த்த போது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் அவரது உடல் கிடத்தப்பட்டுக் கிடந்ததைக் கண்டு நான் அழுதுவிட்டேன். மேவி எழுந்த கவலையினால் அல்ல. அல்லவே அல்ல. 1977ஆம் ஆண்டை யோசித்;தேன். ஓடி ஓடி சிம்ம கர்ஜனை கேட்டது - இரத்தப் பொட்டிட்டது - இதோ தமிழீழம் என்று நம்பியது – அம்மாளை இரஞ்சியது – ஐந்து கள்ள வாக்கு அளித்தது – எவ்வுளவு ஏமாளியாக இருந்தேன். எல்லா ஈழத்தமிழரும் ஏமாளிகளாக இருந்தனர். அந்த இடத்தில் நான் கதறி அழுதேன். அது ஒன்றுதான் அப்பாத்துரை அமிர்தலிங்கத்துக்கு அடியேன் தரத்தக்க காணிக்கை.
இனி முடிவுரை எழுதுவேன், முழுதாக முப்பது வருடங்கள். ஆயுதப் போராட்டத்தில் அடையமுடியா அத்தனை இலக்குகளையும் அடைந்தோம். அற்புதமான தலைவரைப் பெற்றோம். சர்வதேசம் கட்டிவிட்ட சதி. அத்தனையையும் இழந்தோம். மீண்டும் அடிமைப்பட்ட இனமாக நாம் ஆகிவிட்டோம். இது தொடர வேண்டுமா? தொடரப் போகிறதா?
நமது போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க டக்ளஸ், கருணா என்றொரு குழு வந்தது. நமது உணர்வை விற்றுப் பிழைக்க சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய கூட்டணி வந்திருக்கின்றது. கஜேந்திரகுமார் தலைமையிலான அணி ஒன்றே உறுதியாக இறுதிவரை நிற்கும் அணி என்று எனக்குப் படுகின்றது. மிகுந்த இருட்டுக்குள் நிற்கின்றோம். சின்னதொரு விளக்கை ஏந்துவோம். அது கஜேந்திரகுமார் அணியின் தலையில் மகுடம் சூட்டுவதால் மட்டுமே முடியும்.
அல்ல என்று ஆரும் நம்பினால் சம்பந்தன் அணியை அனுப்பிப் பாருங்கள். ஒன்றிரண்டு வருடத்துக்குள்ளேயே முழுதாக கற்று முடிப்பீர்கள்.
இப்போது சேரன் கவிதையில் ஒன்று சொல்கிறேன்.
'தயவுசெய்.
நிறுத்து
இல்லையேல்
அனுபவி
துயரப்படு
நொந்து சுருங்கு
வெடித்துச்சிதறு.'